பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்தில் சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!
2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்தும், கோயம்பேட்டிலிருந்தும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அவை குறித்த விபரத்தை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் தங்கி பணிபுரிவோர் பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின் போது தங்களது சொந்த ஊருக்கு சென்று உற்றார் உறவினருடன் கொண்டாடுவது வழக்கம்.
இதனால், லட்சக்கணக்காணோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதால் அவர்களுக்காக பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அனைத்து தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிற்க அண்மையில் கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி எந்தெந்த பேருந்து முனையங்களில் இருந்து எந்தெந்த ஊருக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த அதே நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
12/01/2024 முதல் 14/01/2024 வரை கிளாம்பாக்கத்திலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.
NH45 தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கமாக இயங்கும் பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும் (KCBT) அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கின்ற நாகப்பட்டினம், கும்பகோணம், திருத்துறைபூண்டி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.