பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? - ரயில் முன்பதிவு குறித்து #IRCTC அறிவிப்பு!
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் (செப். 12) முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி போகி பண்டிகையும், 14-ம் தேதி பொங்கல், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, பொங்கல் பண்டிகைக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிமாநிலங்களிலும் பணியாற்றுபவர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கிப் பயில்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், நாளை மறுநாள் (செப். 12), ஜனவரி 11-ல் பயணம் செய்ய விரும்புவோர் செப். 13-ம் தேதியிலும், ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப். 14-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். அதேபோல, ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்யலாம்.
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக மற்றும் ரயில்வே நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பொங்கல் விடுமுறை பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.