"மணிப்பூர் மக்கள், விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள் உங்கள் குடும்பம்தானே?" பிரதமருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
பாஜக தலைவர்கள் தங்கள் எக்ஸ் தளத்தில் 'மோடியின் குடும்பம்' என்று பெயர் மாற்றியுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் "மணிப்பூர் மக்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் எல்லாம் உங்களின் குடும்பம்தானா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனிடையே பிப்.3 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், "பிரதமர் நரேந்திர மோடிக்கு குடும்பமே இல்லை. பிரதமர் மோடி இந்து அல்ல. அவரது தாய் இறந்தபோது அவர் தனது தலை முடியை எடுக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் இன்று மோடி குடும்பத்தில் உள்ளனர்." எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என அனைவரும் தங்களின் எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் 'மோடியின் குடும்பம்' எனச் சேர்த்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் "மணிப்பூர் மக்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் எல்லாம் உங்களின் குடும்பம்தானா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.