பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லாவை நீக்க அரபு லீக் ஒப்புதல்!
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது.
எகிப்து, சவூதி அரேபியா, லெபனான், சிரியா உள்ளிட்ட 22 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அரபு லீக், ஈரானால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா படையினரை பயங்கரவாதிகளாக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவுடன் செயல்படும் மற்றோா் ஆயுதக் குழுவான ஹமாஸுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, அண்டை நாடான லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
அதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. இது, இரு தரப்பிலும் முழு போருக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் கடுமையான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஹிஸ்புல்லா படை முன்பைவிட அதிக பலம் பெற்றுள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் முழு போரு வெடித்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துவருகின்றன. இந்தச் சூழலில், போரைத் தவிா்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவே ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அரபு லீக் நீக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணி வாய்ப்பு… எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?
இது குறித்து அந்த அமைப்பின் துணை பொதுச் செயலர் ஹோஸம் ஸாகி எகிப்து தொலைக்காட்சியில் கூறியதாவது:
"ஹிஸ்புல்லா படையை இதுவரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தோம். இது, எங்கள் தீர்மானங்களிலும் எதிரொலித்தது. ஆனால், ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது. அந்த நிலையைப் போக்குவதற்காக, பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.