அதிக தேசிய விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் #ARR!
2022-ம் ஆண்டிற்கான தேசிய சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், தேசிய விருதுகளை அதிகம் வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. அதன்படி 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆக.16) அறிவிக்கப்பட்டது. இந்த முறை 2022-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்திற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதோடு சிறந்த பின்னணி இசையமைப்பு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய பிடிவுகளிலும் தேசிய விருதை வசப்படுத்தி பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படக்குழு அசத்தியுள்ளது.
அதன்படி, சிறந்த பின்னணி இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானும், சிறந்த ஒலி வடிவமைப்பு வழங்கிய ஆனந்த் கிருஷ்ண்மூர்த்தியும், சிறந்த ஒளிப்பதிவாளராக ரவி வர்மனும் தேசிய விருதை பெறுகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான்:
1992-ம் ஆண்டு, தனது முதல் திரைப்படமான 'ரோஜா' மூலம் இந்திய சினிமாவின் இசைத் துறையையே புரட்டிப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் எனச் சொன்னால் அது மிகையாகாது. இன்று வரை தான் இசையமைக்கும் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு வகையான புதுமையைச் செய்து வருகிறார் அவர்.
1. 1992-ம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ரோஜா திரைப்படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதினை 1993-ம் ஆண்டு பெற்றார்.
2. 1996-ம் ஆண்டு வெளியான மின்சாரக்கனவு திரைப்படத்திற்காக 1997-ம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 2-வது முறையாக பெற்றார்.
3. பாலிவுட்டில் 2001-ம் ஆண்டு வெளியான லகான் திரைப்படத்திற்காக 2022-ம் ஆண்டு சிறந்த இசைக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது பெற்றார்.
4. 2002-ம் ஆண்டு தமிழில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2003-ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.
5. 2017-ம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.
6. மேலும் 2017-ம் ஆண்டு வெளியான மாம் ஹிந்தி திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதையும் பெற்றார்.
7. தற்போது 2022-ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 1-ம் பாகம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரஹ்மான் எனும் இசைப்புயல் 2 ஆஸ்கர் விருதுகள், 7 தேசிய விருதுகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று ஆசியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.