Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏப். 9, 10 -ல் மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி...

09:40 AM Apr 07, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக 6வது முறையாக ஏப். 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகிறார்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 04-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

முன்னதாக அரசு நிகழ்ச்சிகள், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடங்கி வைத்தல், கட்சிப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு 5 முறை வருகை தந்தார். இந்நிலையில் 6-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளார். மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டில் இது பிரதமர் மேற்கொள்ளும் இறுதிக்கட்ட பிரசாரமாக அமையும் என கருதப்படுகிறது.

பிரதமரின் வருகை, சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஏற்கெனவே சென்னை, வேலூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் மத்திய, மாநில அரசின் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அவரது பயணத்தின் உத்தேச நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணியளவில் மகாராஷ்டிராவின் கோண்டியாவில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமர், மாலை 4.10 மணிக்கு சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை அமைந்துள்ள கிண்டி வரை மக்களைச் சந்தித்தவாறு பிரதமர் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி இரவு தங்கும் பிரதமர், 10-ம் தேதி காலையில் மீண்டும் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்கு புறப்படும் பிரதமர், 10.10 மணியளவில் தரையிறங்கியதும் சாலை மாா்க்கமாக காலை 10.15 மணியளவில் வேலூர் கோட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார்.

பின்னர், முற்பகல் 11.15 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து விமானப் படை விமானத்துக்கு மாறி 11.50 மணியளவில் கோவைக்குப் புறப்படுகிறார். கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஹெலிபேடுக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் பொள்ளாச்சிக்கு பகல் 1.25 மணியளவில் புறப்பட்டு ஐந்து நிமிடங்களில் பொள்ளாச்சியை சென்றடைவார்.

அங்கிருந்து பிரதமர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதையடுத்து, பிற்பகல் 3 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் கோவைக்கு வருகிறார். பின்னர், பிற்பகல் 3.05 மணியளவில் விமானப் படை விமானம் மூலம் மகாராஷ்டிராவின் நாகபுரிக்கு புறப்படும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags :
BJPElection2024Elections2024Narendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaPoliticsTamilNadu
Advertisement
Next Article