2 புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்?
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ்வர்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலியாகவுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு புதிய அதிகாரிகளை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, அவரது பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இதற்கிடையே, மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
அதற்கு முன்னதாகவே, புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று நடைபெற்றன. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், உத்தரகாண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரி சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்வர்குமார் கேரள கேடரை சேர்ந்தவர். இந்த குழு பரிந்துரைந்துள்ள இந்த இரண்டு தேர்தல் ஆணையர்களின் பெயர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரின் ஒப்புதலுக்கு பிறகு அறிவிக்கப்படும்.