'மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்' - மஹுவா மொய்த்ரா முறையீடு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார்.
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவைப் பகிர்ந்து கொண்டதாகவும், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியதாகவும் மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.
அதில் மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் பணம், பரிசு பொருட்களை பெற்று கொண்டு அவரை கேள்வி எழுப்ப அனுமதித்ததாக கூறப்படுகிறது. கேள்வி கேட்பதற்காக தான், மஹுவா மொய்த்ரா தன் இணையதள விபரம், பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இந்த அறிக்கை விவாதத்தில், மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தொடர்ந்து, தனது மனுவை விசாரிக்க இன்று(டிச. 13) அல்லது நாளை(டிச. 14) பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். டிசம்பர் 15 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மஹுவா மொய்த்ராவின் மனுவை பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
தொடர்ந்து, மின்னஞ்சல் மூலமாக உடனடியாக முறையீடு செய்யுமாறும் தான் உடனடியாக அது குறித்து முடிவெடுப்பதாகவும் மஹுவா மொய்த்ரா தரப்புக்கு தலைமை நீதிபதி பதில் அளித்துள்ளார்.