ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!
ஞானவாபி மசூதி வளாகத்தில் பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஞானவாபி மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில், மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்னா் மாபெரும் இந்து கோயில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மசூதி நிலவறையில் பூஜை செய்ய அனுமதிக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பூஜை செய்ய ஒரு வாரத்துக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதனை அடுத்து, ஞானவாபி மசூதி வளாகத்தில் பூசை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இந்த விவாகரம் பேசு பொருளாகியுள்ள நிலையில், இந்துக்கள் பூஜை செய்ய அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.