“பாலாபிஷேகம் செய்வதோடு பசிக்கும் குழந்தைக்கு பால் வாங்கியும் கொடுங்கள்” - ரசிகர்களுக்கு டி.ஆர் சொன்ன அட்வைஸ்
ரசிகர் மன்றங்கள் பாலாபிஷேகம் செய்வது மட்டுமின்றி பசிக்கும் பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்கும் மக்கள் நல மன்றங்களாகவும் செயல்பட வேண்டும் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18,19 ஆகிய இரு நாட்களில் பெய்த கனமழையால் தென்மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அரசும், அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.
என்னையும், என் மகனையும் தூக்கி வளர்த்த தமிழ்நாடு மக்கள் மழை வெள்ளத்தால்
துயரப்பட்டதை கண்டு மனம் தாங்காமல் நெல்லை, தூத்துக்குடி மக்களை சந்திக்க
நேரடியாக வந்தேன். தென்மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்குவதில் எந்த வித அரசியலோ, எதிர்ப்பார்ப்போ எனக்கு இல்லை. நான் முன்பெல்லாம் டி.ஆராக இருந்தேன் ஆனால், இப்போது இறையடியாராக மாறிவிட்டேன்.
ரசிகர் மன்றங்கள் பாலாபிஷேகம் செய்வது மட்டுமின்றி பசிக்கும் பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்கும் மக்கள் நல மன்றங்களாகவும் செயல்பட வேண்டும் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், நான் ஒரு எம்.எல்.ஏவும் கிடையாது. கரை வேட்டியும் கட்டி வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பிடி அரிசியையாவது கொடுப்பதை புண்ணியமாக கருதுகிறேன் என தெரிவித்தார்.