“எதையும் ஹேக் செய்யலாம்” - EVM குறித்த முன்னாள் பாஜக அமைச்சரின் கருத்துக்கு எலான் மஸ்க் பதில்!
இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று பாஜகவை சேர்ந்த மத்திய முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதற்கு “எதையும் ஹேக் செய்யலாம்” என எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்க சுயேட்சை வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி அமெரிக்க முதன்மை தேர்தல் முறைகேடுகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் “போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆவணங்கள் இருந்ததால் பிரச்னைகள் கண்டறியப்பட்டு வாக்குகள் எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைவரான எலான் மஸ்க்,
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்றபட வேண்டும். மனிதர்கள் மற்றும் ஏஐ மூலம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும், வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது” என கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து, உலக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை எழுப்பியது.
இதனையடுத்து எலான் மஸ்கின் இந்த பதிவிற்கு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“எலான் மஸ்க்-ன் பொதுப்படையான கருத்து தவறானது; பாதுகாப்பான டிஜிட்டல் மென்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என்ற எலான் மஸ்க்-ன் பார்வை அமெரிக்காவிற்கு பொருந்தும்.
அமெரிக்காவிற்கும் பிற இடங்களுக்கும் மஸ்க் சொல்வது பொருந்தக்கூடும். ஆனால், அங்கு அவர்கள் இணையத்துடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க வழக்கமான கணினி தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்திய EVMகள் தனிப்பயனாக்கப்பட்டவை, பாதுகாப்பானவை மற்றும் எந்தவொரு நெட்வொர்க், மீடியாவுடனும் சம்பந்தப்படாதவை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியான முறையில் இந்தியாவில் தயாரிக்கிறோம். எலானுக்கு இதை கற்றுக்கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு, “எதையும் ஹேக் செய்யலாம்” என மீண்டும் எலான் பதிலளித்துள்ளார்.
இதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள மத்திய முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “தொழில்நுட்ப ரீதியாக எதுவும் சாத்தியம். எடுத்துகாட்டாக குவாண்டம் கம்ப்யூட். ஏராளமான ஆதாரங்களுடன் டிக்ரிப்ட் செய்ய முடியும், ஜெட் விமான கட்டுப்பாடுகள் உட்பட எந்த டிஜிட்டல் மென்பொருள், அமைப்பும் ஹேக் செய்ய முடியும்; ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை மற்றும் காகித வாக்களிப்பில் இருந்து வேறுபட்ட விவகாரம்” என பதிலளித்துள்ளார்.