பெண் பத்திரிக்கையாளர் விவகாரத்தில், நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன்!
பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி தமிழில், தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாஜகவை சேர்ந்த இவர், கேரள மாநிலம் கோழிகோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர், “கேரளாவில், இத்தனை வருடங்களில் பாஜகவால் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லையே?” என்று கேட்டார்.
அக்கேள்விக்கு பெண் பத்திரிக்கையாளரின் கைவைத்த படியே பதில் கூறினார். அந்தப் பத்திரிகையாளர் அவர் கையைத் தட்டிவிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் பத்திரிக்கையாளர் மீது கை வைத்து பேசியது பத்திரிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கேரள பத்திரிகையாளர் சங்கம் இதற்குக் கண்டனம் தெரிவித்து, நடிகர் சுரேஷ் கோபி அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, “இதுவரை எப்போதும் பொதுஇடங்களில் நான் தவறாக நடந்து கொண்டதில்லை. இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பத்திரிகையாளரின் உணர்வுகளை மதிக்கிறேன். எனது நடத்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பின் இந்த பதிவு குறித்து பேசிய அந்த பெண் பத்திரிக்கையாளர் "அவர் வெளியிட்ட பதிவு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போலவே உள்ளது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் கோபி மீது கோழிக்கோடு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் சுரேஷ் கோபிக்கு கேரள உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.