For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் - நடந்தது என்ன?

11:49 AM Jun 15, 2024 IST | Web Editor
மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம்   நடந்தது என்ன
Advertisement
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில்,  தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். 
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ளது.  இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு,  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்,  வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் (ஜூன் 13) கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்தனர்.  இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.  அப்பொழுது திருமணமான பெண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் வீட்டாருக்கும்,  கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதனையடுத்து கட்சியின் அலுவலகம்,  கண்ணாடி,  இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.  இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் பெண்ணின் தாய் சரஸ்வதி,  தந்தை முருகவேல்,  பந்தல் ராஜா உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில்,  தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்  கூறியதாவது,

Advertisement

"பந்தல் ராஜா என்பவர் தலைமையில் வந்து அலுவலகத்தை சூறையாடினர்.  பெண்கள் என்றும் பார்க்காமல் தாக்கியிருக்கிறார்கள்.  அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்திருந்தனர்.

நெல்லை மாவட்டத்தை பொருத்தவரையில் தொடர்ந்து கொலை நடந்து கொண்டிருக்கிறது.  சாதிய கொலைகள்,  ஆணவக் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டிருக்க கூடிய இரண்டு பேருக்கும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

பெண் வழக்கறிஞர் பழனி வீட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பிபின் என்ற காவலர் பெண் வழக்கறிஞர் பழனியோடு பேசி இருக்கிறார்.  அந்தக் காவலர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டாம்,  என்னிடம் ஒப்படையுங்கள் என்று கூறியிருக்கிறார்.  அவர் ஏன் அப்படி சொல்ல வேண்டும்?

இவ்வளவு தூரம் தாக்குதல் நடத்திய நிலையில் காவல்துறை இதுவரை எஸ்சி, எஸ்டி வழக்காக பதிவு செய்யவில்லை.  கத்தி வைத்து தாக்க வந்த போதும் கூட எஸ்சி எஸ்டி வழக்கை பயன்படுத்த காவல்துறை மறுக்கிறது.  கூலிப்படையை ஏவுவதற்கான முயற்சி நடைபெற்று உள்ளது. அவர்களின் தொலைபேசி உரையாடலை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் முன்னெடுக்கும்.

இந்த தாக்குதலில் ரூ.5 லட்சம் அளவிற்கு பொருட்கள் சேதம் ஆகியுள்ளது.  பெற்றோரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.  மாவட்ட நிர்வாக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை உடனடியாக களைந்து எடுக்க வேண்டும்.  விபின் என்ற காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். "

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதை காண...

Tags :
Advertisement