ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.32,500 பறிமுதல்!
ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத 32,500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த
ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஒப்பந்ததாரர்களிடம், அதிகாரிகள் பணத்தை பெற்றுகொண்டு பில் தொகை ஒப்புதல் கொடுப்பதாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆய்வாளர் நாகேந்திரன் தலைமையில் 15 பேர் கொண்ட
குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்ட
வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரியின் வாகனத்தை நிறுத்தி உள்ளே அழைத்துச் சென்று
அவரது அறை மற்றும் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் கணக்கில் வராத 32,500 ரூபாய் பணம் கிடைத்தது.
மேலும், அலுவலர்கள் வைத்திருந்த ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு கணக்கு இருந்ததால், அவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரியிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 12 மணி வரை சோதனைகள் நடத்தப்பட்டது. இதில், ரூ.32,500 மட்டுமே கிடைத்ததை தொடர்ந்து அனைவரும் சோதனை முடித்துக்கொண்டு திரும்பி சென்றனர். இந்த தொகை குறித்து அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.6,03,500 பணம் சிக்கிய நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும்
அதிகாரிகள் உஷாராக இருந்ததாக கூறப்படுகிறது.