அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து - மீட்பு பணிகள் தீவிரம் !
அமெரிக்காவில் வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் கடந்த புதன்கிழமை இரவு 67 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மற்றொரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.30 மணியளவில் லியர்ஜெட் 55 என்ற விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து அமெரிக்கா மட்டும் இன்றி உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.