தவெகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக ”ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது.ம றுபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகமும் மதுரையில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெறும் கட்சியின் 2-வது மாநில நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான முதல் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தவெகவின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
”தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 5 கழக மண்டலங்கள், 120 கழக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் கழகக் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று, கழகச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தின்படி, மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், நாளை (21.07.2025) திங்கள்கிழமை, மாலை 04.00 மணி அளவில் சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதைக் நமது வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.