அண்ணா பிறந்தநாள்- 12 சிறைவாசிகள் முன்விடுதலை!
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று 12 சிறைவாசிகளையும் விடுவிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமியர்கள். அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்கவில்லை என முதலமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இவர்கள் 20 முதல் 25 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 12 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவையிலிருந்து ஆறு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரி கமல், விஜயன், அபுதாஹிர், ஹாரூன் பாட்ஷா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோவை சிறைத்துறை எஸ்.பி தகவல் வெளியிட்டுள்ளார். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன் என்பவரும், புழல் சிறையில் இருந்து ஜாகீர் என மொத்தம் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.