அண்ணாவின் 55-வது நினைவு நாள் – அதிமுக சார்பில் மரியாதை!
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விடுதி அருகில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அமைதிப் பேரணியில் அமைச்சர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் பேரறிஞர் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில்.
“சமூகவியல் கொள்கையாக இருந்த திராவிடத்தை ஒப்பற்ற அரசியல் தத்துவமாக மாற்றியவரும், ஆட்சிக் கட்டிலில் திராவிடத்தை அமரச் செய்து, மாநிலத்தின் பெயர் முதல் அரசின் பதவிகள், கோப்புகள் வரை "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என நவீன தமிழ்நாட்டை கட்டமைத்து அதனை தமிழ்மயமாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு கண்ட, கழகத்தின் முதல் எழுத்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 55வது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன், தமிழ்நாட்டின் சீர்மிகு கொள்கைகளாகப் பேரறிஞர் அண்ணா நிறுவிய சமூகநீதி-சமத்துவம்-மாநில சுயாட்சி ஆகியவற்றைப் தொடர்ந்து பேணிக் காத்திடுவோம்!” என பதிவிட்டுள்ளார்.