அண்ணாவின் 55-வது நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.!
அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு ஸ்பெயினில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விடுதி அருகில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அமைதிப் பேரணியில் அமைச்சர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியாக சென்ற திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக துணை பொதுச் செயலாளர்கள் அ.ராசா எம்.பி, கனிமொழி எம்பி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ பெரியசாமி, கே என் நேரு, எ.வ வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா சுப்பிரமணியன், காந்தி, செஞ்சி மஸ்தான், சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் , சி வெ கணேசன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இதனைத் ஹொடர்ந்து தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் பேரறிஞர் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்!
எண்ணித் துணிக கருமம்! என்றென்றும்_அண்ணா “ என தெரிவித்துள்ளார்.