சென்னையில் வெளுத்து வாங்கிய மழை | 1 மணி நேரத்தில் அண்ணாநகரில் 9 செ.மீ மழை பதிவு!
சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று நண்பகல் திடீர் மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதியில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூரில் 37 மில்லி மீட்டர், ராமநாதபுரம் பகுதியில் 23 மில்லி மீட்டர், புதுக்கோட்டை பகுதியில் 42.4 மில்லி மீட்டர், கடலூர் பகுதியில் 13.2 மில்லி மீட்டர், காஞ்சிபுரத்தில் 12 மில்லி மீட்டர், புதுச்சேரியில் 12.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 3.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை சென்னை பெருநகர மாநகராட்சி தகவல் அடிப்படையில் அண்ணாநகர் மேற்கு பகுதியில் 9 சென்டிமீட்டர் மழையும், புது மணலி டவுன் பகுதி, கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை பகுதிகளில் 6 சென்டிமீட்டர் அளவும் மழை பதிவாகியுள்ளது.