அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், உயர் நீதிமன்றமும் பல கேள்விகளை எழுப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைத்துள்ளது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையக்குழுவும் இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழுவை எதிர்த்து எவரேனும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது” என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் வழக்கறிஞர் வரலட்சுமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.