"அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்" - துணைவேந்தர் வேல்ராஜ்
சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு தாளுக்குத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு 300 ரூபாய் தேர்வுக் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்புக்குத் தேர்வுக் கட்டணம் 600 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்: புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் இந்தியா உள்பட 7 நாடுகளில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பு! மருத்துவ ஆய்வில் தகவல்!!
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி, இந்த செமஸ்டர் தேர்வில் இந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே இருக்கும்' என்று கூறினார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், "உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். அமைச்சர் உத்தரவு தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும் பொதுவாக கட்டணத்தை 100% உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பின் 50% மட்டுமே உயர்த்தியுள்ளோம்" என வேல்ராஜ் தெரிவித்தார்.