புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலை.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் அண்மை மாவட்டங்களில் கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்திருந்தது. டிசம்பர் 5 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 2024-ம் ஆண்டு பிப்ரவரி 17 வரை தேர்வுகள் நடைபெறும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.