அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் - முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் அச்சடிக்கப்படுவது டிஜிட்டல்மயமாக்கப்பட்டத்தில் முறைகேடு நடந்ததாக சி.ஏ.ஜி அறிக்கையில் கண்டறியப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையின் கணக்கு தணிக்கை குழு நடத்திய விசாரணையில் முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க தனியாக ஒரு துணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது.
சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த குழு கூட்டத்தில் 2016-17 காலகட்டத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றிய துணைவேந்தர், துணைவேந்தர் பொறுப்புக் குழு அதிகாரிகள், சுமார் 6 ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் பேராசிரியர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளித்தனர்.
மேலும் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பேராசிரியர்களுக்கு விசாரணை கமிட்டி முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது. எவ்வாறு விதிமீறல் நடைபெற்றது, யார் உடந்தையாக இருந்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரிக்கப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமென தணிக்கை துணை குழு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் சட்டசபை பொது கணக்கு குழுவிற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முறைகேடு புகார்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தான் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தவை என்றும், தனக்கும் இந்த விவகாரம் குறித்தும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.