லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் மடிக்கணினியில் 75 நபர்களின் பெயர் - வெளியான அதிர்ச்சித் தகவல்!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து 75 நபர்களின் பெயர் பட்டியல் சிக்கி உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. இருப்பினும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அங்கித் திவாரியை விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யபட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் விவேக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை மண்டல துணை அதிகாரி அங்கீத் திவாரி தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சிவஞானம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். அப்போது அவர், கைது செய்யப்பட்ட அங்கீத் திவாரியை விசாரித்ததில் இந்த வழக்கில் மேலும் சில அதிகாரிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியின் மடிக்கணினியில் இருந்து லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள 75 நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விவரம் சிக்கி உள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, இரண்டு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என நீதிபதி சிவஞானம் தெரிவித்தார்.