சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா!
வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 18 அடி உயர சிலைக்கு மஞ்சள் இளநீர் பன்னீர் தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று (ஜன.10) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து வரலாற்று சிறப்பு வாய்ந்த கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஷோடச அபிஷேகம் நடைபெற்றது.
மஞ்சள், இளநீர், நல்லெண்ணெய், களபம் பன்னீர், தேன், பால், அரிசி, தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த அபிஷேகங்களை காண்பதற்காகவும், தரிசனம் செய்வதற்காகவும் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதையும் படியுங்கள்: பொங்கலை பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை!
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் லட்டும், பஞ்சாமிர்தமும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நண்பகல் அன்னதானமும், மாலை 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பும் அணியப்பட உள்ளது.
மேலும், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு கழுத்து வரை நிறையும் வகையில் புஷ்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கார தீபாரனையுடன் ஜெயந்தி விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏரளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் .