‘அனிமல் 2’ படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் - ரன்பீர் கபூர் தகவல்!
அனிமல் படத்தை 3 பாகங்களாக உருவாக்க இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா விரும்புவதாக நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அனிமல். சர்ச்சைக்கு பெயர் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. அதற்கு முந்தைய ஆண்டு அவர் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டு படங்களும் அதன் தொடர்ச்சிகளைப் பெறத் தயாராக உள்ளன.
சமீபத்தில் ரன்பீர் கபூரும் இதுகுறித்த தகவலை பகிர்ந்துள்ளார். டெட்லைன் ஹாலிவுட் உடனான உரையாடலில் கலந்து கொண்ட ரன்பீர் கபூர், குறிப்பாக அனிமல் பார்க் மற்றும் பிரம்மாஸ்திரா 2 பற்றி பேசினார்.
படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது வேறொரு படப்பிடிப்பில் இருப்பதால், 2027 ஆம் ஆண்டில் அனிமல் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்றும், இந்த படத்தில் வில்லன் மற்றும் கதாநாயகன் என இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அனிமல் பார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய ரன்பீர் கபூர் பிரம்மாஸ்திரா பாகம் 2 பற்றிய அப்டேட்டையும் பகிர்ந்துள்ளார். அதில் தனது மனைவி ஆலியா பட்டுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் கதை எழுத உள்ளதாகவும் தெரிவித்தார். இரண்டாவது பாகம் பிரம்மாஸ்திரம் பகுதி 2:தேவ் படத்திற்கான நடிகர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் இடம்பெறலாம் என்றும், இதனால் உற்சாகமாக இருப்பதாகவும் ரன்பீர் தெரிவித்துள்ளார்.