ஆனி கிருத்திகை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகையை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத்தேரில்
எழுந்தருளி கிரி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆனி கிருத்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (ஜூலை 2) ஆனி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதனையொட்டி நேற்று இரவு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் முழங்க தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படும் கிருத்திகை நட்சத்திரத்தை யொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.