அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா! பக்தி பரவசத்தோடு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த புகழ்பெற்ற
பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மார்ச். 14-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து மகிஷாசுரமர்த்தனம், கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று
தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதற்காக இன்று காலை அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள
செலம்பூர் அம்மன் கோயிலில் இருந்து அம்மனை (குதிரை) அழைத்து வந்தனர்.
தொடர்ந்து செலம்பூர் அம்மன் குண்டம் அருகே வந்தவுடன் சிறப்பு பூஜைகள்
மேற்கொள்ளப்பட்டது. முதலாவதாக கோயில் தலைமை பூசாரி குண்டத்தில் உள்ள
தீயை அள்ளி இறைத்து குண்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குச்சிகளுடன் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்,
ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கைக்குழந்தையுடனும் மற்றும் சிறுவர்கள், சிறுமியர்கள்
குண்டம் இறங்கியது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. மேலும் சிலர் பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இத்திருவிழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.