14பேரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து - ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே விபத்திற்கு காரணம் என அஷ்விணி வைஷ்ணவ் பகீர் தகவல்!
14பேரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம் என அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.
விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலில் பிரேக் பிடிக்காத நிலையில் அது தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயில் வந்ததால் இவ்விபத்து நடந்துள்ளது.
இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டுடன. அதில் இருந்த பயணிகள் காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 15க்கும் மேற்பட்டோர் பலியான விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் இந்திய ரயில்வேயின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது ” ஆந்திர ரயில் விபத்திற்கு மிக முக்கியமான காரணம் வண்டியை இயக்கிய லோகோ பைலட்கள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே வண்டியை இயக்கியதுதான் . இதன் மூலம் அவர்களது கவனத்தை சிதறடிக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, லோகோ பைலட்கள் மற்றும் உதவி லோகோ பைலட்கள் கவனமுடன் இருப்பதை உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம்” என தெரிவித்தார்.