ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை - தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு அறிவித்தது.
ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான நாட்களில் ஆசிரியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் என பல்வேறு அரசு துறை ஊழியர்கள் தங்கள் பணியில் இருந்து ஒரு மணி முன்னதாக செல்லலாம் என தெலங்கானா அரசு அறிவித்தது.
இதனை விமர்சித்த அம்மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங், “ரமலானை முன்னிட்டு முஸ்லிம் ஊழியர்கள் பணியில் இருந்து முன்கூட்டியே செல்ல அனுமதிக்கும் தெலங்கானா அரசு ஏன் இந்துப் பண்டிகைகளுக்கு அது மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை” என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து தெலங்கானா காங்கிரஸ் பிரமுகரும் மாநில அரசின் சிறுபான்மையினர் நலன் ஆலோசகருமான முகமது அலி ஷபீர், “கடந்த காலங்களில் மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் இது மாதிரியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புதிய உத்தரவு அல்ல. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட இந்த சலுகை உள்ளது” என கூறியுள்ளார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியில் இருந்து ஒரு மணி நேரம் முன் கூட்டி செல்லலாம் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.