வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அஞ்சலி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.
இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதற்கிடையே, உடன்பாட்டை மீறி ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வான் பாதுகாப்பு படைகள் அவற்றை முறியடித்ததாகவும் தகவல் வெளியானது.
பின்னர், ஜம்மு & காஷ்மீரின் ரஜோரி, அக்னூர், பூஞ்ச் மற்றும் பஞ்சாபின் பதான் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு ட்ரோன்கள், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்த தாக்குதல்கள் எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால், ஜம்மு & காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மே 8ம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் என்பவர் வீர மரணம் அடைந்தார்.
இவரது உடல் நேற்று தனது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார். அந்த வகையில், இன்று வீர மரணம் அடைந்த வீரரின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.