ஆந்திர முதலமைச்சரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரத்தில் சட்டப் பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது.
ஆந்திர முதலமைச்சரும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் உள்ள புலிவந்துலா தொகுதியில் போட்டியிடவுள்ளாா். இதையடுத்து அவரின் சாா்பில் கட்சி நிா்வாகிகள் தோ்தல் ஆணையத்தில் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனா்.
அதில், ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என்றும் கடந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு 41 சதவீதம் உயா்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2022-23 ஆண்டில் அவரது வருமானம் ரூ.50 கோடி எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரின் மனைவி பாரதி ரெட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.176.30 கோடி எனவும் அவரிடம் ரூ.5.30 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு சரஸ்வதி சிமெண்ட்ஸ் மற்றும் சந்தூா் பவா்ஸ் ஆகிய நிறுவனங்களில் பங்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராகும் முன்பு அவா் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயால் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.