#TirupatiLaddu விவகாரம் | ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்ட பாஜக இளைஞர் அணி!
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜகவின் இளைஞர் அணி பிரிவினர் முற்றுகையிட்டனர்.
ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
பின்னர், லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது ஆட்சியின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, திருப்பதி லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு இழுத்து விட்டுள்ளார் என்றும், திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில் அரசு ஒர் அளவுக்கு மேல் தலையிட இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : SrilankaElection மெட்டா மற்றும் TikTok தளங்களில் விளம்பரம் - கோடிக் கணக்கில் செலவு செய்த அரசியல் கட்சிகள்!
இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜக இளைஞர் அணியினர் முற்றுகையிட்டனர். விஜயவாடா அருகே தாடேபள்ளியிலுள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை பாஜக இளைஞர் அணியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெகன்மோகனின் சித்தப்பாவும் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோருக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினரை போலீசார் கைதுசெய்தனர்.