"தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும்" - காங்கிரஸ் மதுரை மாவட்ட நிர்வாகி புகார்!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகி சையது பாபு புகார் அளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. மார்ச் 22-ம் தேதி பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “மக்களவைத் தேர்தலில் விசிக 5 மாநிலங்களில் போட்டி” - திருமாவளவன் பேட்டி!
இதையடுத்து, தேர்தல் முடியும் வரை பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் நடித்துள்ள திரைப்படங்கள், சீரியல் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதுரை மாவட்ட நிர்வாகி சையது பாபு என்பவர் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிற்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் மனு அளித்துள்ளார்.
“நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் சினிமா நடிகர்கள், விளம்பர படங்களில் நடித்து வருபவர்களாக உள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.
உதாரணமாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா ஒரு சினிமா நடிகை. ராதிகா நடித்த விளம்பர காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது. தேர்தலில் போட்டியிடும், நடிகர், நடிகைகளின் திரைப்படம், விளம்பரம், மற்றும் சீரியலாக இருந்தாலும் தேர்தல் விதிமுறைப்படி அவற்றை காட்சிப்படுத்த தடை விதிக்க வேண்டும்”
இவ்வாறு சையது பாபு தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.