அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அதற்கான உரிமைகளை வழங்காமலும் திமுக அரசு பாகுபாடு காட்டி வருகிறது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம், அவற்றை அழிக்க முயன்ற அரசு, இப்போது ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (Career Advancement Scheme - CAS) எனப்படும் பதவி உயர்வுக்கான அரசாணை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான விதிமுறைகள் அதே ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும், அதற்கான ஊதிய உயர்வும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த உரிமை அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு, அவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ள நிலையில் 4 ஆண்டுகளிலும், இல்லாவிட்டால் 5 ஆண்டுகளிலும் முதுநிலை உதவிப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கி, அதற்கேற்ற வகையில் ஊதியத்தின் அளவும் ஒரு நிலைஉயர்த்தப்பட வேண்டும். அதன்பின் 5 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை உதவிப் பேராசிரியர்களுக்கு தேர்வு நிலை உதவிப் பேராசிரியர்களாகவும், அந்த நிலையில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இணைப் பேராசிரியர்களாக 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பேராசிரியர் நிலை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை கடந்த ஜூன் 23- ஆம் தேதி அழைத்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், ஜூலை மாத ஊதியப் பட்டியலில் அவர்களின் ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக அரசுக்கே உரிய மோசமான இலக்கணத்தின்படி அந்த வாக்குறுதி காற்றோடு போய்விட்டது.
முழுமையான பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை திசம்பர் 12-ஆம் தேதி முதல் நடத்தவிருக்கும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.