வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்றபோது ஏற்பட்ட உயிரிழப்பு - இழப்பீடு அறிவித்த அன்புமணி ராமதாஸ்!
பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞரணி மாநாடு நேற்று(மே.11) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அன்றைதினத்தில் மாநாடு நடைபெற்ற மகாபலிபுரத்தை நோக்கி சென்ற வேன் ஒன்று சீர்காழி அட்டகுளம் அருகே உள்ள புறவழிச் சாலை இணைப்பு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது, வேனில் பயணம் செய்த மருவத்தூர் பகுதியை சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் விஜய் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து அதில் பயணித்தவர்கள், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மீது ஏறி செல்லாமல் இருக்க, எதிர்திசை சாலையில் அஜாக்கிரதையாக ஓட்டுநர் வேனை திருப்பியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த விஜய் என்பவருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இழப்பீடு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.