வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்!
தென்காசியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லத்திற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் பிஸ்கெட், பிரட், அரிசி, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து, தென் மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் அத்யாவசிய பொருட்களை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நியூஸ் 7 தமிழின் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை அலுவலகங்களில் நிவாரணப்பொருட்களை வழங்கலாம் என்றும், அவற்றை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அன்பு பாலம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் ஆர்வத்துடன் பொருட்களை வழங்கினர்.
இதையும் படியுங்கள்: “விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!
இதனைத் தொடர்ந்து, நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள நன்கொடையாளர்களிடமிருந்து பிஸ்கெட், பிரட், அரிசி, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகள் பெறப்பட்டு, வடகரை பகுதியில் செயல்பட்டுவரும் அன்பு இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதியவர்களுக்கு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இளவரசி மூலம் தென்காசி மாவட்ட செய்தியாளர் ராஜன், இந்த நிவாரண பொருட்களை வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.