25 ஆண்டுகளை கடந்த கல் நெஞ்சங்களை கரைக்கும் காவியம்… டாம் ஹாங்ஸ்-ன் ‘The Green Mile' திரைப்படம்..
டாம் ஹாங்ஸ் மற்றும் கிளார்க் டங்கன் இணைந்து மனதை கலங்கவைக்கும் ‘தி கிரீன் மைல்’ திரைப்படம் வெளியாக இந்த மாதத்துடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
முன்னணி மற்றும் ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான டாம் ஹாங்ஸ்க்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த நடிப்பு அரக்கனின் சாதனைகளில் ஒன்று ‘The Green Mile'. 6 டிசம்பர் 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி கிரீன் மைல்’. படத்தில் சிறைக் கண்காணிப்பாளர் பால் பாத்திரத்தில் டாம் ஹாங்ஸும், ஜான் காஃபி பாத்திரத்தில் மைக்கேல் கிளார்க் டங்கனும் நடித்திருப்பார்கள். ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை உணர்வுப் பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் பிராங்க் டாராபாண்ட். சிறை வாழ்க்கையின் வலியை உணர்த்தும் ‘தி ஷாஷாங்க் ரீடெம்ஷன்’ படத்தை இயக்கியவர் இவர்.
பால் எட்ஜ்காம்ப் (டாம் ஹாங்ஸ்) என்ற முதியவர் முதியோர்கள் இல்லத்தில் தனது வசந்தகால வாழ்வின் நினைவுகளை அசைபோட்டபடி நாள்களை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு பாடலைப் பார்த்தவுடன் பழைய நினைவுகளின் அழுத்தம் தாங்காமல் அழுகிறார். அந்தக் கண்ணீருக்குக் காரணம் என்ன என்று கேட்கும் தனது தோழியிடம், வலிமிகுந்த தனது கதையை சொல்கிறார்.
அவர் பணிபுரிந்த சிறைச்சாலையான ‘கிரீன் மைல்’ மரணதண்டனைக் கைதிகளுக்கானது. சில நாட்களே உயிருடம் இருக்கும் அவர்கள்மீது வன்மம் காட்ட என்ன இருக்கிறது? அங்கே கொண்டுவரப்படும் கைதிகள்மீது கண்காணிப்பாளர் பாலும் பிற காவலர்களும் பரிவுடன் நடந்துகொள்கின்றனர். ஒருநாள் சிறைக்கு அழைத்துவரப்படும் கைதியைப் பார்க்கும் காவலர்களுக்குப் பேரதிர்ச்சி. கைகால்களில் விலங்கிடப்பட்டுக் கொண்டுவரப்படும் கொலைக் குற்றவாளி ஜான் காஃபி ஏழு அடிக்கும் அதிகமான உயரத்தில் பிரம்மாண்டமான உருவம் கொண்ட கறுப்பின மனிதன்.
இரண்டு சிறுமிகளைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர். அமைதியான அந்தச் சிறைக்கூடம் அவனது வருகையால் சற்றே பதற்றத்துக்குள்ளாகிறது. கூச்ச சுபாவம் கொண்ட அந்த ராட்சத உருவம் கொண்ட மனிதன், ஆபத்தில்லாதவன் என்பதை பாலும் மற்றவர்களும் விரைவில் உணர்ந்துகொள்கின்றனர். ஜான் காஃபியிடம் இருக்கும் விசேஷ சக்திதான் கதையின் ஆன்ம பலம். சிறுநீரகத் தொற்றால் அவதிப்படும் பால், ஜான் காஃபியின் அந்த அற்புத சக்தி மூலம் முற்றிலும் குணமடைகிறார்.
புதிதாக காவலர் குழாமில் சேர்ந்த பெர்சி வெட்மோர் வக்கிர மனம் கொண்டவன். கைதிகளைத் துன்புறுத்தத் தயங்காதவன். மரண தண்டனைக் கைதியான எட்வர்ட் டெல் செல்லமாக வளர்க்கும் எலியைக் காலால் மிதித்தே கொன்றுவிடுகிறான். பரிதாபத்துக்குரிய அந்தக் கைதி அலறித் துடிக்கும்போது மீண்டும் ஒரு அதிசயம் நிகழ்கிறது. ஜான் காஃபி அந்தப் பிராணியை தன் கைகளுக்குள் பொத்திவைத்து அதன் மரணத்தைத் தன் உடலுக்குள் வாங்கிக்கொள்கிறான். சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெறும் எலி அன்புக்குரிய தன் எஜமானரைக் கொஞ்சுகிறது.
பெர்சி தன் குரூர எண்ணத்தை டெல்லின் மரண தண்டனை நாளில் அரங்கேற்றுகிறான். மின்சார நாற்காலியில் அமரவைக்கப்படும் கைதியின் தலையில் நீரில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை வைப்பது முக்கியம். உயர் அழுத்த மின்சாரம் தரும் அதிர்ச்சி, கைதியின் உடலைப் பொசுக்கிவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடு அது. ஆனால், பஞ்சை நனைக்காமலேயே டெல்லின் தலையில் வைத்துப் பொருத்திவிடுகிறான். இதனால், டெல் மிகக் கோரமாக மரணமடைகிறான். தன் சிறை அறையில் இருந்தபடியே அந்தக் கொடூர நிகழ்வை உணர்ந்து துடிக்கிறான் ஜான் காஃபி.
ஆனால் உண்மையில் வைல்ட் பில்தான் அந்தச் சிறுமிகளைக் கொன்றவன். சம்பவத்தை நேரில் பார்க்கும் ஜான், சிறுமிகளைத் தன் சக்தியின் மூலம் காப்பாற்ற முயல்கிறான். தாமதமான தனது முயற்சி பலிக்காமல் போகவே, கதறி அழும் அவனைக் குற்றவாளி என முடிவு செய்கிறது சிறுமிகளைத் தேடிவந்த உறவினர் கூட்டம். தன் அற்புத சக்தியால் பிறர் உயிரைக் காப்பாற்றும் அந்த உன்னத மனிதன், செய்யாத குற்றத்துக்காக மரண தண்டனை பெறுகிறான்.
ஜானை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் பாலும் காவலர்களும் சிறையிலிருந்து தப்பிச் செல்ல அவனுக்கு உதவத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர். மனிதத் தன்மையற்ற இந்த உலகிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளவே விரும்புவதாகச் சொல்லும் ஜான், மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். மரண தண்டனை விதிக்கப்படும் நேரத்தில், காவலர்கள் கலங்கிய கண்களுடன் உறைந்து நிற்கின்றனர்.
இக்கதையைத் தன் தோழிக்குச் சொல்லும் பால், மற்றொரு அதிசயத்தையும் அவளுக்குக் காட்டுகிறார். முதியோர் இல்லம் இருக்கும் வனப்பகுதியில் உள்ள பழைய வீட்டில், ஒரு சிறு பெட்டியில் இன்னும் உயிருடன் இருக்கிறது டெல்லின் செல்ல எலி. அதிசயிக்கும் தோழிக்கு இன்னொரு உண்மையைச் சொல்கிறார் பால். அவருக்குத் தற்போது வயது 108. இருவருக்கும் தன் அற்புத சக்தி மூலம் நீடித்த வாழ்நாளைப் பரிசளித்துச் சென்றிருக்கிறான் ஜான். எனினும், தன் அன்புக்குரியவர்களின் இறப்புகளைச் சந்திக்க நேரும் துயரம்தான் தனக்கு மிஞ்சுகிறது என்று சொல்லும் பால், தன் முடிவுக்கான நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதுடன் படம் நிறைவடைகிறது.
சிறைக்கு வெளியே கொண்டுவரப்படும் சமயத்தில் வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து ஒரு குழந்தையைப் போல் குதூகலிக்கும் காட்சியிலும், தலைமைக் காவலரின் மனைவியைக் குணப்படுத்தும் காட்சியிலும் மைக்கேல் கிளார்க்கின் நடிப்பு, கண்களை நனைத்துவிடும்.