தண்ணீர் குடிக்கச் சென்று தவறி விழுந்த யானை... அணை நீர் நிறுத்தப்பட்டதும் தானாக கரையேறி காட்டுக்குள் தஞ்சம்!
தமிழ்நாடு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகு அருகே தண்ணீர் குடிக்க சென்ற இடத்தில் தவறி விழுந்த யானை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் எவ்வித காயமுமின்றி காட்டுப்பகுதிக்குள் சென்றது.
தமிழ்நாடு, கேரளம் எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் கம்பம் பள்ளத்தாக்குக்கு முதல் போக சாகுபடிக்காக 1200 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில், தமிழக பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகு அருகே யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது.
அப்போது தவறுதலாக தண்ணீர் திறந்து விடும் மதகு முன்பு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் யானையை
மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். தண்ணீரின் வேகம் வினாடிக்கு 1200
கனஅடியாக இருந்த நிலையில், யானையால் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்து
வந்தது. இதனால் யானையை மீட்டெடுக்க முடியாமல் இருந்தது.
இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை முழுவதுமாக நிறுத்தி, பின்னர் யானையை மீட்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தண்ணீரின் வேகம் குறைந்ததால், யானை நீந்தி தானாகவே மறுக்கரையை அடைந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது. எவ்வித காயமுமின்றி வனப்பகுதிக்குள் யானை சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.