"கடந்த கால பிரதமர்களில் மோடியைப் போன்று யாரும் வெறுப்பு பேச்சுகளை பேசவில்லை" - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்!
"கடந்த கால பிரதமர்களில் மோடியைப் போன்று யாரும் வெறுப்பு பேச்சுகளை பேசவில்லை" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.
இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்படி உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி எதிர்கட்சிகள் மீது பல விமர்சனங்கள் முன்வைத்தார். எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் உங்களின் சொத்துக்களை பிடிங்கிவிடுவார்கள், தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள், காங்கிரஸ் ஆட்சியில்தான் 2 இஸ்லாமிய நாடுகள் உருவாகின போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்கட்சிகள் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் மாநில வாக்காளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக வெறுக்கத்தக்க, பயன்படுத்தக் கூடாத விமர்சனங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மற்றும் எதிர்கட்சிகள் மீது முன்வைக்கிறார். இந்திய வரலாற்றில் இதுவரை இருந்த பிரதமர்களில் யாரும் இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன்வைத்ததில்லை.
ஜனநாயகம் மற்றும் நமது அரசியலமை சட்டத்தை ஒரு சர்வாதிகார ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை வரக்கூடிய தேர்தலின் மூலம் உறுதி செய்ய வேண்டும். இதற்கான ஒரு இறுதி வாய்ப்பு நம் முன்னே உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் நாகரீகம் என்பது அறவே இல்லை; விவசாயிகள் போராட்டத்தில் இரட்டை வேடம் போட்டவர் பிரதமர் மோடி; கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது; சர்வதிகாரத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காக்க மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.