அமோனியா கசிவு விவகாரம் - கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
அமோனியா கசிவு விவகாரம் தொடர்பாக கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம், தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரமண்டல் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடா்பான வழக்கு தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்று உரத்தொழிற்சாலைக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
- கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்கும் முன் தொடர்பான துறைகளிடம் தடைவில்லா சான்று பெற வேண்டும்.
- மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகள் கண்காணித்து அனுமதி வழங்க வேண்டும்.
- கோரமண்டல் உரத்தொழிற்சாலைக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
- அரசின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொழிற்சாலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும்.