லட்சங்களில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, இன்று மதுப்பிரியர்களின் கூடாரம்!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியில் மக்களுக்காக 2020-2021ஆம் ஆண்டில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் தற்போது பராமரிப்பின்றி தவிப்பாகும் நிலையில் உள்ளது.
தொடக்கத்தில் வீரசிகாமணியை சுற்றியுள்ள கிராமங்களான குலசேகரமங்கலம், சேர்ந்தமரம், அரியநாயகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, குழந்தைகள் விளையாட்டுக்காகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பூங்கா பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பூங்காவை பராமரிக்காததால் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாகவும் போதை பொருட்கள் அதிகம் நடமாடும் இடமாக மாறி உள்ளது.
பூங்காவில் உள்ள இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், மது பாட்டில்கள் உடைந்த நிலையில் காணப்படுவதும், சிகரெட் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குப்பைகள் பரவலாக இருப்பதும் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பூங்காவின் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாததால், துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. மர்மநபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த எலக்ட்ரிக் உபகரணங்கள், பராமரிக்கப்படாத புல்வெளி மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முற்றிலுமாக நின்றது.
இதனை தொடர்ந்து பூங்கா அருகே நாள்தோறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று வருகின்ற நிலையிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. பசுமை சூழலோடும், இயற்கை அமைப்போடும் அமைந்த இந்த பூங்காவை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பூங்கா சீரமைக்கப்பட வேண்டும் என்பததே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.