“அம்மா அமைப்பு முதுகெலும்பு இல்லாதது” - #Actress பத்மபிரியா காட்டம்!
ஹேமா கமிட்டி அறிக்கையை நான்கரை ஆண்டுகளாக வெளியிடாததற்கு, அரசு பதில் சொல்ல வேண்டும் என நடிகை பத்மபிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது.
இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, பல திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கபட வேண்டும் எனவும், மலையாளம் மட்டுமின்றி மற்ற திரையுலகில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் வெளிவருகின்றன. இந்நிலையில் மலையாள திரைப்பட சங்கமான அம்மா சங்கத்திற்கு தலையும் இல்லை, முதுகெலும்பும் இல்லை என நடிகை பத்ம பிரியா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது;
அம்மா அமைப்புக்கு தலையும் இல்லை. முதுகெலும்பும் இல்லை. அம்மா சங்க குழு ராஜிநாமா செய்தது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை. திரைப்பட நிறுவனங்கள் தற்போதைய நிகழ்வுகளை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளாக மட்டுமே கருதுகின்றன. ஹேமா கமிட்டி அறிக்கையை நான்கரை ஆண்டுகளாக வெளியிடாததற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது மட்டுமே அரசு எடுத்த ஒரே நடவடிக்கை. இது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையவில்லை. குழுவின் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து இதுவரை எந்த தெளிவும் இல்லை.
அம்மா சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டு ராஜிநாமாவை நான் எதிர்பார்க்கவில்லை. ராஜிநாமா செய்தால் ஒழுக்கம் அதிகரித்துள்ளதாக கருதுகிறார்கள் போல. இதெல்லாம் ஏன் என்று புரியவில்லை. WCC உறுப்பினர்கள் சென்று சந்தித்த பிறகு முதலமைச்சர் ஹேமா குழுவை நியமித்தது பெரிய விஷயம். ஆனால் நான்கரை ஆண்டுகளாக அறிக்கை வெளியிடாதது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.