அமித்ஷா சென்னை வருகை: முதலமைச்சருடன் SDPI கட்சியினர் சந்திப்பு - அதிமுக கூட்டணி உடைகிறதா!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்தித்து பேசினார். அப்போது வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம், திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக நெல்லை முபாரக் நன்றி, தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பேசிய எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "நாடு முழுவதும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து மற்ற அணைத்து கட்சிகளும் வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோசமான மக்கள் விரோத, சிறுபான்மை விரோத, வக்ஃபு சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் சட்டமன்றத்தை நிறைவேற்றியதற்காகவும், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக வாக்களித்ததிற்கும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு போதும் இந்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று உறுதியாக கூறியதற்காக எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களையும் ,பாராட்டுகளையும் தெரிவித்தோம்.
எனவே தமிழ்நாடு ஒருபோதும் வக்ஃபு திருத்த மசோதாவை ஏற்றுக்கொள்ளாது. அதேபோல், ஒட்டுமொத்த தமிழகமும் அதனை எதிர்க்க வேண்டும். நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக அணைத்து ஜனநாயக சக்திகளும் இதற்கு ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.