பிரசாரத்திற்காக ஏப்.4ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா!
தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, நேற்றுடன் நிடைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனையும் இன்று நடந்து முடிந்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
இந்த நிலையில், பா.ஜ.க, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்.,4 ல் மதுரை மற்றும் சிவகங்கையிலும், 5ம் தேதி சென்னையிலும் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.