“அமித்ஷாவால் தமிழ்நாட்டில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” - அமைச்சர் ரகுபதி பேட்டி!
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் 9.5
கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பின்பு அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசியபோது, “ இந்திய அரசியலிலே ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. ஆளுநருக்கு கால நிர்ணயம் மட்டுமே இருந்தது. ஒரு மாத கால அவகாசம் மட்டுமே மட்டுமே உள்ளது. ஆளுநர் நினைத்தால் அவர் இதுவரைக்கும் ராஜினாமா செய்து இருக்கலாம். மத்திய அரசு நினைத்தால் அவரை திரும்ப அழைத்திருக்கலாம். இனி அவர் பதவியில் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் இனி சட்ட மசோதாவிற்கு காலம் தாழ்த்த முடியாது.
திமுகவின் மூத்த அமைச்சர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு எந்த கருத்தையும் பேசுவதில்லை, பேசிக் கொண்டிருக்கும்போது நாக்கு தவறி சில வார்த்தைகளை கூறிவிடுகின்றனர். அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மூத்த அமைச்சர்கள் குறித்து கருத்து கூற எனக்கு உரிமை இல்லை.
பொன்முடி அமைச்சர் பதிவில் இருப்பது குறித்தும் அவரை நீக்குவது குறித்தும்
முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார். அமித்ஷா சாணக்கியராக இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து ராஜதந்திரங்களையும் தெரிந்தவர். அமித்ஷாவால் தமிழ்நாட்டில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணியை விட்டு எந்த கட்சியும் போகாது.
புதிய கட்சி சேர்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணி கட்சிகளில் கலந்து
ஆலோசித்து அதன் பின்னர் அவர்களின் சம்மதத்தின் பேரில் திமுக கூட்டணிக்கு
அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் இணைத்துக் கொள்வார். பாஜக உடன் கூட்டணியிலிருந்து கொண்டு நான்கு ஆண்டு காலம் அவர்களுடன் கொஞ்சி குலாவி அவர்கள் கூறுவதற்கெல்லாம் தலையாட்டி கொண்டிருந்த அதிமுக ஏன் அப்போது இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாங்கள் கேட்கலாம் அல்லவா. அமித்ஷா வருகை என்பது அவருடைய கட்சி விவகாரம் எங்களை பொறுத்தவரை நாங்கள் தெளிவாக உள்ளோம். எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி.
இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் ஆளுநர் ஒன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் இல்லை என்றால் மத்திய அரசு அவரை திரும்ப பெற்று இருக்க வேண்டும். அவர் இருந்தாலும் கவலை இல்லை நாங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் இனி காலதாமதம் இல்லாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி ஒப்புதல் பெறப்படும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியை அள்ளிக் கொடுக்கவில்லை கில்லி தான் கொடுத்துள்ளது. கொடுத்ததை கூறும் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து எவ்வளவு நிதியை பெற்றுள்ளார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்”
இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.