ஈராக், சிரியா பகுதிகளில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்!
சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் புரட்சிப் படைகள் (ஐஆர்ஜிசி) மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 85-க்கும் அதிகமான இலக்குகள் மீது அமெரிக்கா கடந்த பிப். 02-ம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த மாதம் ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டத்தற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிரியாவில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், உளவுத்துறை மையங்கள், ராக்கெட், ஏவுகணைகள், ட்ரோன்கள், வெடிமருந்து சேமிப்புத்தளங்கள் என அமெரிக்க ராணுவம் பல இடங்களை குறிவைத்து நடத்தியுள்ளது. இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய உத்தரவின் பேரில், இராக்கிலும், சிரியாவிலும் ஈரான் புரட்சிகர பாதுகாவல் படையுடன் (ஐஆர்ஜிசி) தொடர்புடைய ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜோர்டானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பதிலடி தொடங்கிவிட்டது. இது தொடரும். அதற்கான நேரங்களையும், இடங்களையும் அமெரிக்கா முடிவு செய்யும்” என்று குறிப்பிடுள்ளாா்.
அமெரிக்க ராணுவம் அதன் மிகப்பெரிய தாக்குதலின் முதல் கட்டத்தில், சிரியாவில் 4 இலக்குகள் மற்றும் ஈராகில் 3 இலக்குகள் என 7 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. நீண்ட தூரம் சென்று தாக்கும் பி-1 பாம்பர்ஸ் உள்ளிட்டவைகள் கொண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியாவில் 18 ஈரான் ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈராக் ராணுவம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் இது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை குலைத்துவிடும் என்று எச்சரித்துள்ளது. ஈராக் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ரசூல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை மீறுவதாகும். ஈரான் அரசின் முயற்சிகளை குறைத்து மதிப்பிடும் செயலாகும். மேலும் ஈராக் மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை குலைத்துவிடும் அபாயத்துக்கு ஈட்டுச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.