அமேதி, ரே பரேலி வேட்பாளர்களை அறிவிக்காத காங்கிரஸ்.....வேட்புமனுவுக்கு நாளை கடைசிநாள்!
உத்தரப் பிரதேச மாநில அமேதி, ரே பரேலி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும்.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே.7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளான அமேதி, ரே பரேலியில் மனு தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாள்.
ஆனால் இதுவரையிலும் காங்கிரஸ் தரப்பில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டு வந்தார். ஆனால் மன்மோகன் சிங் ஓய்விற்கு பின் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என்னும் கேள்வி தொண்டர்களிடையே எழுந்து வருகிறது.
அதுபோன்று கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையிடம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தொழிலதிபரும், பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா அத்தொகுதியில் போட்டியிட கோரி சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது மேலும் பரபரப்பைக் கூட்டியிருந்தது.
அதேபோல், ரே பரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இவ்விரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் இன்றுக்குள் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தாக வேண்டும்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியிடம் நேற்றே கட்சித் தலைவர்கள் இறுதி ஆலோசனை நடத்தி முடித்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமேதியில் பாஜக வேட்பாளராக ஸ்மிருதி ராணி களமிறக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ரே பரேலியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், பாஜக ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் என கூறப்படுகிறது.