அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் - குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!
அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய அவர் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் ஏப்.14ம் தேதியான இன்று அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரண ஸ்தலத்தில் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.